Our Mission Min 1024x762 1

தோற்றமும் மாற்றமும்

இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க இங்கிலாந்து தேசத்தின் பிஷப் கால்டுவெல் அவர்கள் தியாகம் செய்து இந்தியாவின் தென்கோடிக்கு வந்து, ஊழியம் செய்து விதையாய் மரித்த திருநெல்வேலி மாவட்டத்தின் இடையன்குடியில் பிறந்தவன் நான். தேவன் எனக்கு நல்ல பெற்றோரையும், அன்புள்ள இரண்டு கோதரர்களையும், இரண்டு சகோதரிகளையும் தந்தார். நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில் ஆலயத்தின் பாடல் குழுவில் சேர்க்கப்பட்டு பாரம்பரிய கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டேன். எனது 26வது வயதில் வாழ்வில் முற்றிலும் சமாதானத்தை இழந்த நான் இனி வாழ்வது வீண் என முடிவு செய்து தற்கொலை செய்துகொள்வதற்காக விஷ பாட்டிலை
வாங்கினேன். என்னை நேசித்த அநாதி தேவன் இரு சகோதரர்கள் மூலம் அந்நாளில் என்னை சந்தித்தார். அவ்விரு சகோதரர்களும் அறிவித்த சமாதானத்தின் சுவிசேஷத்தினால் பாவத்தில் இருந்த நான் உணர்வடைந்தேன். தேவனிடம் பாவத்தை அறிக்கை செய்த என்னை தேவன் மன்னித்து மீட்டு உலகம் கொடுக்கக்கூடாத சமாதானத்தை தந்தார். 1974-ம் ஆண்டு மீட்கப்பட்ட என்னை தேவன் தமது பரிசுத்த ஆவியினால் நிரப்பினார். பாவ மன்னிப்புக்கென்று நியமிக்கப்பட்ட ஞானஸ்நானத்தில் தேவனோடு உடன்படிக்கை செய்ய கிருபை தந்தார்.

திருமண வாழ்க்கையின் ஆரம்பம்

தேவன் என்னை சாவுக்கு விலக்கி மீட்டு, அவருடைய சமாதானத்தை தந்தபடியால் என்னைப்போன்றோர் இயேசுவை அறிந்து மீட்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் திருமணம் செய்யாமலேயே தேவனுக்கு ஊழியம் செய்ய வாஞ்சித்தேன். ஆனால் பெற்றோரின் கட்டாயத்தால் திருமணத்திற்கு சம்மதித்தேன். அன்பின் தேவன் என்னைப் போன்று இரட்சிக்கப்பட்டு, அபிஷேகம் பெற்ற ஒரு சகோதரியை ஏற்ற துணையாக 1975-ம் ஆண்டு தந்தார்.

banner 1024x577.jpg

Our Mission Min 1024x762 1

அழைப்பும் அர்ப்பணிப்பும்

மகிமையின் தேவன் 1976-ம் ஆண்டு தகுதியில்லாத எங்களை அவரது ஊழியத்திற்கு அழைத்தார். குடும்பத்தாரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலே ஆண்டவருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்து எங்களது உத்தியோகத்தை ராஜினாமா செய்தோம். தேவ ஊழியத்தை 2 ஆண்டுகள் வேலூரில் தற்போது ஆசீர்வாத இளைஞர் இயக்கமாக செயல்பட்டு வரும் ஸ்தாபனத்தில் சகோ.R.ஸ்டான்லி அவர்களுடன் குடும்ப நண்பராக இணைந்து செயல்பட்டோம். பின்னர் திருச்சியிலுள்ள ஆவிக்குரிய நல்ல போதகரான ஈஸ்டர்தாஸ் அவர்களிடம் சபை ஊழியத்தில் இணைந்தோம். அந்த போதகரின் கீழ் ஏழு ஆண்டுகள் திருச்சியிலும், ஏழு ஆண்டுகள் சென்னையிலும் (மாங்காடு, பட்டாபிராம்) ஊழியம் செய்தோம்.

ஆத்தும பாரமும் ஊழியமும்

தேவாதி தேவனுடைய தீர்மானத்தின்படி (06.06.1992) இல் பூவிருந்தவல்லியில் சீயோன் சபையை தனியே எங்கள் மூலமாய் ஆரம்பிக்க தேவன் கிருபை செய்தார். எங்களை மிகவும் நேசித்த ஒரு குடும்பத்தார் நாங்கள் வாடகையில்லாது வசிக்கவும், மேலும் பல உதவிகளையும் செய்து அவர்களது வீட்டிலேயே சபையை
ஆரம்பிக்கவும் உதவி செய்தார்கள். அவ்வீட்டில் 10 சதுர அடி அறையில் இரண்டு போதகர்களின் ஜெபத்துடன் சீயோன் சபை ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஊழியத்தில் ஆத்துமாவிற்கும், பணத்திற்கும் தேவனே மூலதனமாக இருந்தார். தேவன் என்னை உண்மையுள்ளவன் என்று எண்ணினபடியாலும் உத்தமன் என்று எண்ணி இந்த சுவிசேஷத்தை தந்தபடியினாலும் தேவனைத் துதிக்கிறேன். மூன்று பிள்ளைகளைத் தந்த தேவன் அவர்களை இரட்சித்து அபிஷேகித்தார். தேவனை மாத்திரமே நம்பி ஆரம்பித்த
இவ்வூழியத்தைத் தேவன் ஆசீர்வதித்து ஆத்துமாக்களைத் தந்தார். அருகிலுள்ள இடத்தை மாதம் ரூபாய்.400 தரை வாடகைக்கு பேசி ஓலைக் கொட்டகைப் போட்டு தேவனை ஆராதித்தோம். பின்பு தார் ஷீட் போட்டு ஆராதித்தோம். அதன்பின், சில ஆண்டுகளில்
அந்த இடத்தை தேவன் எங்களுக்குக் கடனில்லாமல் வாங்க உதவி செய்தார். கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!

banner 1024x577.jpg

Our Mission Min 1024x762 1

சபையும் மிஷனரி பணியும்

கர்த்தருடைய கிருபையால், தனது 17 வயதில், எனது மூத்த மகள், தேவ அழைப்பைப் பெற்று ஜெம்ஸ் இயக்கத்தில் மிஷனெரியாக இணைந்தாள். நமது இந்திய தேசம் இயேசு கிறிஸ்துவை அறிய எங்களது சபையும் ஒரு காரணமாக வேண்டும் என்று எண்ணி ஜெபித்து வருகிறது. தேசம் இயேசு கிறிஸ்துவை அறிய விரும்பி ஆத்தும் பாரத்துடன் உள்ள எங்களது சபையாரை வடநாட்டிலுள்ள மிஷனரி தளங்களைப் பார்வையிட வருடம் ஒருமுறை அழைத்துச் சென்றேன். தேசத்தின் எழுப்புதலைக் காண விரும்பும் எங்களது சபையார் மூலம் வட மாநில மிஷனெரி தளத்தில் இரண்டு
ஆலயத்தைக் கட்டிக் கொடுக்க தேவன் கிருபை செய்தார். எங்கள் சபை மூலம் கிளைச் சபைகளை தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் ஆரம்பிக்க தேவன் கிருபை செய்தார். மேலும் எங்கள் சபையிலிருந்து 3 பேர் மிஷனரிகளாக வடநாட்டிலும் பலர் ஊழியர்களாகவும் ஊழியர் மனைவிகளாகவும் அநேக இடங்களில் எழும்பி இந்தப் பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றனர். இங்கும் சபையைச் சுற்றி கிறிஸ்துவை அறிவிக்காத இடங்களில் எங்கள் சபையார் தொடர்ந்து சுவிசேஷத்தை அறிவித்து வருகிறோம். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. இந்திய தேசம் சீக்கிரம் இயேசு கிறிஸ்துவை அறிவதாக! அதற்கு எங்களது சபையும் ஒரு காரணமாக தேவன் வைப்பாராக.

சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமான சபை

தேவன் ஊழியத்தை ஆசீர்வதித்து, ஆத்துமாக்களை சபையில் சேர்த்தபோது கிழிந்து போன கொட்டகையின்கீழ் ஆராதித்து வந்த எங்களை ஆலயம் கட்டச் சொல்லி தேவன் ஏவினார். அவரையே
மூலதனமாகக் கொண்டு விசுவாசத்தில் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தபோது எங்கள் சபையார் தங்கள் காணிக்கைகளினாலும் உடைமைகளையும் விற்று கொடுத்த தியாகத்தாலும், அநேக பரிசுத்தவான்களின் உதவியினாலும் கடன் இல்லாமல் கட்டிமுடிக்க தேவன் கிருபை செய்தார். அல்லேலூயா! கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்கு முன் நிறுத்திக் கொள்வதற்கும், தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்த இயேசுகிறிஸ்துவின் முன்பாக அவரது விருப்பப்படி சபைகளை நிறுத்திவிடவும் தேவன் கிருபை தருவாராக. ஆமென்.

banner 1024x577.jpg

கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே!

உன் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு! ஆயத்தப்படுத்து.!!

Scroll to Top